ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் பொதுவெளியில் நடுக்கத்துடன் காணப்பட்ட சம்பவத்தால் அவரது உடல்நலம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், தான் நலமாக இருப்பதாக ஏஞ்சலா மெர்க்கல் விளக்கமளித்துள்ளார்.
ஃபின்லாந்து பிரதமர், அன்டி ரினி ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தலைநகர் பெர்லினில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையில் அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது, சுமார் ஒன்றரை நிமிடம் மேர்க்கல் நடுங்கினார். இந்த சம்பவத்தால் மெர்க்கல் உடல் நிலை குறித்து பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில், அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போது, அருகே நின்று கொண்டிருந்த ஏஞ்சலா மெர்க்கல் நடுக்கத்துடன் காணப்பட்டார். அதேபோல், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஜெர்மன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நடந்த அணிவகுப்பிலும், ஏஞ்சலா மெர்க்கல் நடுங்கினார்.
தற்போது மூன்றாவது முறையாக பொதுவெளியில், ஏஞ்சலா மெர்க்கல் நடுங்கியது அவரது உடல் நலம் குறித்து விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இது குறித்து விளக்களித்துள்ள மெர்க்கல், தான் நலமாக இருப்பதாகவும், உடல் நிலையில், எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.