தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய ஆந்திர மீனவர்கள்

விசைப்படகு பழுது காரணமாக ஆந்திர மாநிலத்தில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்களை, அம்மாநில மீனவர்கள் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள நாகூர் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்கள், விசைப்படகு மூலமாக மீன்பிடிக்க கடந்த மாதம் கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், படகில் ஏற்பட்ட பழுது காரணமாக, அதை சரிசெய்வதற்காக, கடந்த ஒன்றாம் தேதி ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் காவலி அருகே கரைக்கு சென்றுள்ளனர். அப்போது, ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்கள் 9 பேரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

தகவலறிந்து தமிழக மீனவர்களை மீட்ட காவலி காவல்துறையினர், இச்சம்பவத்தை மறைத்து, காயமடைந்தவர்களை கடந்த 8 நாட்களாக காவல் நிலையத்தில் வைத்து, காவலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மீனவர்கள் தாக்கப்பட்ட வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மீனவர்களை பாதுகாப்பாக மீட்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Exit mobile version