தமிழகம் முழுவதும் ரூ.1,000 கோடி அம்பேலா?..அல்வா கொடுத்த அமுத்சுரபி நிதி நிறுவனம்…மத்திய அரசின் நிறுவனம் எனக்கூறி மோசடி!

மத்திய அரசின் நிறுவனம் என்னும் பொய்யைச் சொல்லி போலியாக கூட்டுறவு சங்கம் நடத்தி 20 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறிந்து தங்கள் பணத்தை மீட்டுத்தருமாறு ராமநாதபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். மோசடி புகார் கூறப்பட்டுள்ள போலி கூட்டுறவு சங்கம் எது? அது ஏமாற்றியது எப்படி?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் டவுனில் அமுத்சுரபி என்னும் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் உள்ளூர் ஆட்களை பணியமர்த்தி, அவர்கள் மூலமாக, அமுத்சுரபி நிறுவனம் மத்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு துறையின் அனுமதி பெற்ற நிறுவனம் என்றும், இந்த நிதி நிறுவனத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு அதிகபட்சமாக 14 சதவீதம் வட்டி தருவதாகவும் பரப்பியுள்ளனர்.
இதனை நம்பி பலரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்த நிலையில், தினசரி 300 முதல் 1,000 ரூபாய் வரையும், வாரம் ஒன்றுக்கு 2,000 முதல் 4,000 ரூபாய் வரையும் நிதி நிறுவனப் பணியாளர்களே நேரில் வந்து பெற்று சென்றுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக வட்டி மட்டுமே அளித்து வந்த நிறுவனத்தினர், முதிர்வுத் தொகையை தராததால் வாடிக்கையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமுத்சுரபி நிறுவனத்துக்கு பெரிய பூட்டை தொங்கவிட்டுள்ளனர். இதனால் பணம் கட்டியவர்கள் சென்றபோது அங்கு யாரும் இல்லை. அதுமட்டுமின்றி உள்ளூர் பணியாளர்களும், தாங்கள் சம்பளத்துக்கு பணியாற்றியதாகவும் அது ஏமாற்று நிறுவனம் என தெரியாது என்றும் கூறியுள்ளனர்.

இதனிடையே சேலத்தில் செயல்பட்டு வந்த அமுத்சுரபி நிறுவனம் 58 கோடி ரூபாயை மோசடி செய்த தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து முதுகுளத்தூர் மட்டுமின்றி கமுதி, கடலாடி, சாயல்குடி, பரமக்குடி ஆகிய பகுதிகளிலும் இந்த ‘அமுத்சுரபி’ போலி கூட்டுறவு சங்க நிறுவனம் 20 கோடி ரூபாய் அளவுக்கு அமுத்சுரபி மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மூலம் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருவதாக எஸ்.பி. நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் கிளைகளை திறந்து செயல்பட்டு வந்த அமுத்சுரபி நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version