கோயில் திருவிழாவில் இரவு நேரத்தில் ஒலிபெருக்கியில் ஆடலும் பாடலும் நடத்துவதை கண்டித்து தடுத்த போலீசாரை தாக்கிய அமமுக கிளை செயலாளர் சுரேஷ்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரவு 10 மணிக்கு மேல் ஒலிப்பெருக்கியில் ஆடல்,பாடல் நிகழ்ச்சி நடத்தினர். இதனை கண்டித்து தடுத்து நிறுத்திய காவலரை அமமுக கிளை செயலாளர் சுரேஷ்குமார், அவரது தந்தை, ராஜப்பன் என்ற நபர் ஆகிய மூவர் தாக்கிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், அவர்களில் சுரேஷ்குமாரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.