தேர்தல் நிதி கொடுக்காததால் அமமுக கடலூர் நகர செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, அக்கட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
மக்களவை தேர்தலையொட்டி, அமமுக கடலூர் நகர செயலாளர் வினோத் என்பவர் தேர்தல் நிதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள் அமமுகவின் கடலூர் தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
இந்த சம்பவம் குறித்து பேசிய வினோத், தான் கட்சிக்காக தொடர்ந்து உழைத்து வருவதாகவும், ஆனால் தேர்தல் நிதி கொடுக்காததால், தன்னை நகர செயலாளர் பொறுப்பிலிருந்து கடலூர் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் நீக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
கலைச்செல்வனின் விமான செலவுகள், டிடிவி தினகரனின் மக்கள் சந்திப்பு நிகழ்வு போன்றவற்றுக்காக கேட்கும்போதெல்லாம் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் தற்போது தேர்தல் நிதியாக 5 லட்சம் ரூபாய் கொடுக்காத காரணத்தால், தான் நீக்கப்பட்டுள்ளதாகவும் வினோத் தெரிவித்துள்ளார். எந்த அனுபவமும் இல்லாத ஒரு நபரிடம் பணம் பெற்று அவரை நகர செயலாளராக நியமித்துள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.