இன்றைய கிரிக்கெட்டில் புதிய ஆட்டமுறையைப் புகுத்தி, தனது வித்தியாசமான பேட்டிங் செயல்முறையால் ரசிகர்கள் மனதில் நீங்காது இடம்பிடித்திருக்கும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸின் பிறந்தநாள் இன்று.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை இன்றைய 2k குழந்தைகளுக்கு சடாரென்று நியாபகம் வரக்கூடிய பெயர் ஏபி டிவில்லியர்ஸ்தான். தென்னாப்பிரிக்காவின் கேப்டன் பொறுப்பிலிருந்து க்ரீம் ஸ்மித் விலக எத்தனித்திருந்த காலகட்டம் அது. அப்போது யாரை அடுத்த கேப்டனாக நியமிக்கலாம் என்று நினைத்தபோது ஏபி டிவில்லியர்ஸுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. தனது ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கையில் அதிக பின்னடைவினை சந்தித்த ஏபி, பின் நாட்களில் மிடில் ஆர்டரில் அவர் இல்லையென்றால் அணியே இல்லை என்று பேசக்கூடிய அளவிற்கு ஒரு அசுரத்தனமான பேட்டிங்கை செய்து காட்டியவர். குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெறும் 31 பந்துகளில் சதம் அடித்து இன்றுவரை உலகசாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்தப்போட்டியில் வெறும் 44 பந்துகளில் 149 எடுத்து ஆட்டமிழந்திருப்பார்.
2015ஆம் ஆண்டு உலககோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு கடப்பாரை பேட்டிங் லைனை வைத்திருந்தது. ஓபனிங் ஆம்லா, டிகாக். ஒன் டவுன் டூ பிளஸிஸ். பிறகு ஏபி, டும்னி, மில்லர் என்று ஒரு பட்டாளமே இருந்தது. பௌலிங்கில் ஸ்விங் புயல் ஸ்டெயின், மோர்னே மோர்கல் என்று மிரட்டினார்கள். துரதிர்ஷ்ட வசமாக அந்தக்கோப்பைக் கனவு தென்னாப்பிரிக்காவிற்கு கிடைக்கவில்லை. அந்தத் தொடரிலும் வசமாக வந்து சிக்கிய மேற்கிந்திய தீவுகளை பதம் பார்த்திருப்பார் ஏபி டிவில்லியர்ஸ். அதேபோல இந்திய அணியுடனான ஐந்து ஒருநாள் போட்டிக்கொண்ட தொடர் ஒன்று. அந்தத் தொடரில் மூன்று சதங்கள் அடித்து தொடர் நாயகன் விருதினைப் பெற்று செல்வார். ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டூ பிளஸிசும் டிவில்லியர்ஸும் சேர்ந்து இந்திய பவுலர்களை வான்கடே மைதானத்தில் சிதற விடுவார்கள்.
டிவில்லியர்சிற்கு இந்தியாவிலும் ரசிகர் பட்டாளம் அதிகம். முக்கியமாக அவர் ஐபிஎல் அணியில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். விராட் கோலியின் உற்ற நண்பரான டிவில்லியர்ஸ், விராட் கோலி மன வலிமை இழக்கும்போதெல்லாம் அவருக்கு வினையூக்கியாக டிவில்லியர்ஸ் இருந்திருக்கிறார். இதனை கோலியே பல முறை ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். மேலும் 2016 ஐபிஎல் விராட் கோலிக்கும் சரி, ஆர்சிபி ரசிகர்களுக்கும் சரி மறக்க முடியாத வருடம். அந்த வருடத்தில் ஆர்சிபி அணியினை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றவர் டிவில்லியர்ஸ். பல சாதனைகளுக்கு சொந்தகாரராக இருக்கும் டிவில்லியர்ஸ் தன்னுடைய குடும்பத்திற்காக விரைவிலேயே கிரிக்கெட்டினை விட்டு ஒதுங்கிவிட்டார். இதனால் ரசிகர் மத்தியில் பெருத்த சோகம். ஆனால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவர் பகிரும் கருத்துக்களையும் புகைப்படங்களையும் பார்த்து மனதினைத் தேற்றிக் கொள்கின்றனர். மேலும் டிவில்லியர்ஸ் தனது காதல் மனைவியிடம் காதலை சொன்ன இடம் நம் இந்தியாவின் தாஜ்மஹால்தான். இன்றைக்கு பலர் 360 டிகிரி பட்டத்தைப் போட்டுக்கொள்ளலாம். ஆனால் வரலாறு என்பது உண்மையான 360 டிகிரி டிவில்லிர்ஸ்தான் என்று உரக்க சொல்லும்.