சர்வதேச போட்டிகளில் இருந்து அஜந்தா மெண்டிஸ் ஓய்வு

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளார் அஜந்தா மெண்டிஸ், மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் 2008 ஆம் ஆண்டு சுழற்பந்து வீச்சாளராக அஜந்தா மெண்டிஸ் அறிமுகமானார். பந்தை வீசுவதில் மாயாஜாலமாக திகழ்ந்தவர். 87 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டும், 19 டெஸ்ட் போட்டிகளில் 70 விக்கெட்டும், 39 இருபது ஓவர் போட்களில் 66 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மொத்தமாக, மூன்று வகை கிரிக்கெட்டிலும் 288 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில், நீண்ட காலமாக காயங்களால் அவதியடைந்து வந்த நிலையில், அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடைசியாக 2015 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் விளையாடினார். கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடிய மெண்டிஸ், ஒருநாள் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்தார். மேலும், இருபது ஓவர் போட்டியில் இரண்டு முறை 6 விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பந்துவீசிய அஜந்தா மெண்டிஸ், இந்தியாவுக்கு எதிராக 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம், இலங்கை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. மேலும், அதே ஆண்டில், இந்தியாவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டி தொடரில் 26 விக்கெட்டுகளை சாய்த்து, 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்காக காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜந்தா மெண்டிஸ் ஓய்வு பெறுவது குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஏஞ்சலோ மேத்யூஸ் டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அதில், வாழ்த்துக்கள் மெண்டாஸ், குறுகிய காலத்தில் பெரிய நிலையை அடைந்துள்ள உங்களை எதிர்பாராதவிதமாக காயங்கள் கிரிக்கெட்டில் இருந்து தள்ளி வைத்துள்ளது. ஆனால், கடவுள் இரக்கமுள்ளவர், உங்களுக்கு ஏராளமான வழிகளைத் திறப்பார் என்றும், ஆசீர்வதிப்பார் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

Exit mobile version