கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கிறதா “காற்று மாசுபாடு” ?

காற்று மாசுபாடு கருவில் உள்ள குழந்தைகளையும் பாதிக்கின்றது – என்பது மேலைநாடுகளில் நடந்த சமீபத்திய ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியக் குழந்தைகள் காற்று மாசினால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன  என்பதை அறியும் ஆய்வுகள் டெல்லியில் நடந்து வருகின்றன.

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்றின் மாசுபாடு சமீப காலங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் கருவில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியை காற்றுமாசுபாடுகள் பாதிப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கருவில் உள்ள குழந்தைக்கு சத்துகள் செல்லும் பாதையான தொப்புள் கொடியின் பாதையில் கார்பன் துகள்கள் அடைத்துக் கொள்வதால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது என்பது உலகெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை காற்று மாசினால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவது குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள குரு தேஜ் பகதூர் மருத்துவமனை ‘தப்னே’ எனப் பெயரிடப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வை ஓராண்டுக்கு முன்பு தொடங்கியது. இந்தியாவிலேயே காற்று மாசு மிக அதிகமாக உள்ள நகரமான டெல்லியில் வாழும் கருவுற்ற தாய்மார்களைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், அவர்களின் கருவில் உள்ள குழந்தைகளைக் காற்று மாசு எந்த அளவுக்கு பாதிக்கின்றது – என்பதை அறிவதே இந்த ஆய்வின் நோக்கம் ஆகும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறையும், எம்.ஆர்.சி. எனபடும் இங்கிலாந்து அரசின் மருத்துவ ஆய்வு நிறுவனமும் இந்த ஆய்வுக்கு நிதி உதவியை வழங்குகின்றன.

இதற்காக 600 பெண்களிடம் ஆய்வுகள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை 77 பெண்கள் ஆய்விற்கு ஒத்துழைக்க தங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் முதல்முறை பரிசோதனைக்கு வந்தது முதல் குழந்தை பிறந்து ஒன்றறை வயது ஆகும் வரை இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடக்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சி முதல் மூளை வளர்ச்சிவரையிலான அனைத்தும் இந்த ஆய்வில் கண்காணிக்கப்படும். இதில் பங்கேற்பதற்காக பதிவு செய்திருந்த 77 பெண்களில் 50 பேர் இதுவரை குழந்தைகளைப் பெற்று உள்ளனர். இந்த மொத்த ஆய்வுகளின் முடிவுகள் 2023ஆம் ஆண்டு வெளியாக உள்ளன.

இந்த ஆய்வுகளின் முடிவை வைத்தே இந்தியாவில் கருவில் உள்ள குழந்தைகள் காற்று மாசுபாட்டினால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன என்பதை நாம்ன் அறிய முடியும், குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்த வேறு வழிமுறைகளையும் நாம் ஆராய முடியும்.

 

 
 
 
Exit mobile version