அரசு முகமைகளுக்கு இனி டிக்கெட் கிடையாது: ஏர் இந்தியா

பத்து லட்ச ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்துள்ள அரசு முகமைகளுக்குக் கடனுக்குப் பயணச்சீட்டு வழங்குவதை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தத்தளிக்கிறது. இந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்குள் இதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசு முகமைகளான சிபிஐ, உளவுத்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்டவை  268 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இந்த அமைப்புகளின் பணியாளர்கள் பயணம் மேற்கொண்டதற்கான கட்டணத் தொகை இவ்வாறு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பத்து லட்ச ரூபாய்க்கு மேல் கடன் நிலுவை வைத்துள்ள அரசு முகமைகள் நிலுவைத் தொகையை வழங்கும் வரை அவற்றுக்குக் கடனுக்குப் பயணச்சீட்டு வழங்குவதை நிறுத்தியுள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Exit mobile version