பாலியல் வன்கொடுமை… கடந்த பத்தாண்டுகளில் சொல்லமுடியாத அளவுக்கு பெருகியிருக்கும் மானுட துரோகம்… வயது வேறுபாடின்றி இந்த வன்கொடுமைகள் தொடர்வது வருத்தம்தான் என்றாலும், குழந்தைகள் சிதைக்கப்படுவதுதான் இதில் கொடூரத்திலும் கொடூரம்.
இந்நிலையில் அதே ஜம்முகாஷ்மீரில் பந்திபோரா மாவட்டத்தின் சும்பால் பகுதியை சேர்ந்த 3 வயதே ஆன ஐமன் செஹ்ரா என்ற குழந்தை 23 வயதான தாகிர் மிர் என்பவனால் கடந்த மே, 12ம் தேதி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறாள்..
இங்கே மானுட துரோகம் நம்பிக்கை துரோகமாக மறுஉருவெடுத்துள்ளது. அதாவது குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகளில் 86 விழுக்காடு உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் , தந்தையின் நண்பர்கள் என நன்கு அறிந்தவர்களால்தான் நடக்கின்றன என்கின்றன ஆய்வுகள்.
இந்த சம்பவமும் அப்படியே… தாஹிர் மிர் ஐமன் செஹ்ராவின் பக்கத்து வீட்டுக்காரர். ஏற்கனவே பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் செய்வதற்கு பெயர் போன ஆசாமிதான். செஹ்ரா வீட்டில் பலமுறை அவரோடு பேசாதே என்று சொல்லியிருந்தும் குழந்தை அன்பாகவே பழகி வந்தது.
அதுசரி…என்னதான் குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுத்தாலும், மிட்டாய் கொடுக்கும் பக்கத்து வீட்டு மாமா என்னை பலாத்கார நோக்கில்தான் பார்க்கிறார் என்பதை எப்படி அந்த குழந்தை அறிந்துகொள்ளும்.??
அன்று காலை வெளியில் விளையாடப்போன குழந்தையை மாலைவரை காணாததால், தேடிப்போகிறார். தேடியபோது பள்ளிக்கு அருகில் வந்தபோதுதான் கேட்கக்கூடாத அந்த சத்தத்தை கேட்டார் அந்த குழந்தையின் தந்தை.
மனதில் ஏதேதோ நினைப்புகள் ஓட, அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்று உள்ளுக்குள் அழுதபடியே சத்தம் வந்த திசைநோக்கி ஓடிய அவர் கண்ட காட்சியால் நின்றபடி இறந்துதான் போயிருப்பார் அந்த தந்தை.
ஆம். தன் 3 வயது குழந்தையை 23 வயதுடைய அந்த இரண்டு கால் நாய் சிதைத்துக்கொண்டிருந்ததை கண்ணால் கண்டார் அந்த தந்தை. இவரது குரல் கேட்டதும் அவசர அவசரமாக ஒடிப்போனான் தாஹிர் மிர்.
இரத்தம் ஒழுக ஒழுக, வலியில் துடித்துக்கிடந்த தன் குழந்தையை கையால் தூக்கிக்கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்த தந்தை காவல் துறையில் புகார் பதிவு செய்தார்.ஆரம்பத்தில் பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்த புகார், காஷ்மீரின் எல்லாத் தடைகளையும் மீறி இளைஞர்கள் ஒட்டுமொத்தமாக போராட்டம் நடத்தியதற்குப் பின்பே வழக்காக பதிவு செய்யபட்டது.
இளைஞர்கள் எழுச்சி ஏற்படக்காரணம் குற்றவாளி தாஹிர் தண்டனையிலிருந்து தப்புவதற்காக தன்னை மைனர் என்று காட்டிக்கொள்ள ஒரு போலி சான்றிதழ் சமர்ப்பித்துள்ளான் என்பதே.
அதாவது பள்ளி ஆவணங்களின்படி தாஹிர் ரெஹ்மான் மீரின் பிறந்ததேதி 23.07.2009 என்று சான்றளித்திருக்கிறது ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை.
அப்படியென்றால் அவனுக்கு வெறும் 10 வயதுதானா? மேலே இருக்கும் படத்தை மீண்டும் பார்த்தபின் முடிவெடுங்கள்…
இப்படி ஒரு சான்றிதழை வழங்கியதன் மூலம் தவறான உதாரணம் ஒன்றை குற்றவாளிகளுக்கு காட்டியிருக்கும் இந்த நிறுவனத்தின் உரிமத்தை தடை செய்யக்கோரியும் போராட்டங்கள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.
ஏனெனில் இந்திய சட்டப்படி மைனர் குற்றவாளி என்றால் (அதாவது ஜுவனைல் )குறைந்தபட்ச தண்டனை வழங்குவர். அதனால்தான் தன்னை மைனர் என்று நிரூபித்துவிட்டால் குறைவான தண்டனை பெற்று தப்பிவிடலாம் என்றெண்ணி இப்படி ஒரு சான்று வழங்கினான் . அண்மையில் நிர்பயா வழக்கில் ஒரு குற்றவாளி மைனர் என்பதால் அவன் விடுவிக்கப்பட்டான் என்பதும், இதை எதிர்த்த நிர்பயாவின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர் என்பதும் இன்று வரையிலும் அவர்கள் நீதி கேட்டுபோராடி வருகிறார்கள் என்பதும் வருத்ததோடு கவனிக்கப்படவேண்டியவை…
12வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரணதண்டனை வழங்கலாம் என ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆசிஃபா என்ற சிறுமியின் வழக்கிற்குப்பிறகு இந்திய அரசு அறிவித்திருந்தது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
சான்றிதழில் சில கேள்விகள் :
மே 12 ம் தேதிதான் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே மே 12ம் தேதி அன்றே அவசர அவசரமாக நடந்திருக்கிறது இந்த சான்றிதழ் வேலைகள். சான்றிதழில் தரப்பட்ட தேதியை பாருங்கள்.. இந்த சான்றிதழை வழங்கிய இஸ்லாமிய கல்வி நிறுவனம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படுவது என்றாலும்,
சான்றிதழில் கவனித்தால் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையின் லெட்டர் ஹெட்டில் , இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் தலைமையாசிரியர் என்ற ரப்பர் ஸ்டாம்ப்பில் கைழுத்திடப்பட்டிருக்கிறது.
தாஹிரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தரம்தாழ்ந்த இந்த வேலையை செய்திருக்கும் கல்வி நிறுவனம் ஏன் பள்ளியில் சமர்ப்பித்த பிறப்பு சான்றிதழையே நேரடி ஆதாரமாக பயன்படுத்த கூடாது?
மொத்தத்தில் பலரும் பேசமறந்த கதையாக,ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கிடையில் சத்தமிழந்து போன ஐமன் செஹ்ராவுக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும்.
வாயிலிருந்து ரத்தம் வடிய வடிய வலியில் அழும் அந்த குழந்தையின் குரல் நம்மை தூக்கம் தொலைக்க வைப்பதாகவே இருக்கிறது. ரத்தம் வலி என்பதெல்லாம் வாட்சனுக்கு மட்டும் கிடையாது என்பதை நாம் புரிந்துகொண்டால் போதுமானது.
உடல்நிலை மீண்டு சரியாகி, எதிர்காலம் அவளுக்கு எதையும் நினைவூட்டாமல் இருந்தால் அவளும் சராசரி வாழ்வை வாழ்வாள்.
நேற்று ஆசிஃபா இன்று ஐமன் செஹ்ரா நாளை யாரோ?.. ச்சே..என்னடா இது.. என்ன நாடு இது …என்ன சொசைட்டி இது என்கிற உங்கள் எல்லா கோபமும் நியாயமானதுதான் ஆனால்……….மாற்ற வேண்டியது வெளியிலில்லை. வேறெங்கோ இருக்கிறது…
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்……