இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் – எதிர்கட்சி தலைவர்!

நெல்லையில் கழக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, கழக நிர்வாகிகள் இடைக்கால பொதுச்செயலாளருக்கு வெள்ளி செங்கோலை பரிசாக அளித்தனர். மணமக்களை வாழ்த்திய பின் செய்தியாளர்களை சந்தித்த இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டன எனவும் தெரிவித்தார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், ஏழை எளிய மக்கள் அனைவரும் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பவற்காக விலையில்லா வெட்டி சேலைகளை வழங்கினார். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில், பொங்கல் பண்டிகை முடிந்தும் பல இடங்களில் விலையில்லா வெட்டி சேலை வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக பயிர்க்காப்பீடு பெற்று கொடுக்கப்பட்டது என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சும், ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சும் பேசிவருவதாக விமர்சித்தார்.
இதுவரை தமிழகத்திற்கு எந்த ஒரு நல்லதும் செய்யாததால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலை பொருத்தவரை திமுக ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்புடன் இருப்பதாகவும், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த இடைக்கால பொதுச்செயலாளர், அதற்கு பதிலாக தரையில் அமைக்கலாம் என்றும், 80 கோடியில் பேன அமைப்பதற்கு 79 கோடியில் மாணவர்களுக்கு பேனா வழங்கலாம் எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதாகவும், போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் சாடிய எதிக்கட்சித்தலைவர், போலீஸ் ஜீப்பையே திருடும் அளவில்தான் சட்டம்-ஒழுங்கு இருப்பதாக விமர்சித்தார்.

அதிமுகதான், அனைத்து கட்சிகளுக்கும் உதவியாக உள்ளது என்றும் உதவிக்கரம் நீட்டி வருகிறது என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் மக்கள் பிரச்சனையை கண்டுக்கொள்ளவில்லை என்றும், திமுகவிற்கு அதன் கூட்டணி கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளதாகவும் இடைக்கால பொதுச்செயலாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Exit mobile version