அதிமுக அமைச்சர்கள் தங்களது ஜனநாயக கடைமையாற்றினர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அவ்வையார்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதி அதிமுக வேட்பாளரும், சபாநாயகருமான தனபால் வாக்களித்தார். சேலம் மாவட்டம், குகை மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக அரசுக்கு மக்களின அமோக ஆதரவு இருப்பதாகவும், நிச்சயம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீண்டும் அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

கடலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத், தனது வாக்கை பதிவு செய்தார். மேல் குமாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தரப்பினர் நலனையும் காக்கும் அரசாக அதிமுக அரசு செயல்பட்டுள்ளதாக கூறினார். அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.பி.அன்பழன் வாக்களித்தார். காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி அரசு பள்ளியில் குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மீண்டும் வெற்றி பெறும் என்றார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரும் சுகாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் தனது வாக்கை பதிவு செய்தார். இலூப்பூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அவர், தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மக்களுக்காக உழைத்தவர்களையும், தேர்தல் நேரத்தில் வாக்குக்காக வருபவர்களையும் மக்கள் நன்கு அறிவார்கள் என கூறினார். நிச்சயம் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ராஜலட்சுமி தனது வாக்கை பதிவு செய்தார். குல தெய்வம் கோயிலில் வழிபாடு நடத்திய அவர், சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.

சென்னை அண்ணாநகர் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா குடும்பத்துடன் ஜனநாயக கடமையையாற்றினார். அண்ணாநகரில் உள்ள ஜர்சீ மோசஸ் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்களை பதிவு செய்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளரான ராஜன் செல்லப்பா தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version