வேளாண் மண்டல மசோதா நிறைவேற்றம்: எதற்கெல்லாம் தடை

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியதை தொடர்ந்து, காவிரி ஆற்றுப்படுகையில் சில முக்கிய தொழில்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இளகு இரும்பு ஆலை, செம்பு மற்றும் அலுமினியம் உருக்காலைகள், விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் மற்றும் பிற உடல் பாகங்களைப் பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணெய் மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு, பிற ஹைட்ரோகார்பன்கள் உள்ளடங்கிய இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல், பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

முழுமையான காவிரி டெல்டா மாவட்டங்களாகத் திகழும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி வட்டங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி வட்டங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தடை செய்யப்பட்ட எந்தத் தொழில்களையும் தொடங்கக் கூடாது. இந்தச் சட்டம், நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்பாட்டிலுள்ள செயல்கள் அல்லது திட்டங்கள் பாதிக்கப்படாது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலைத் தொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் மற்றும் பிற பயன்பாடுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பாதிக்கப்படாது.

வேளாண் மண்டலப் பகுதிகளில் தடையை மீறி புதிய திட்டங்களைத் தொடங்குவோருக்கு தண்டனை விதிக்கப்படும். ஐந்து ஆண்டுகள் வரை அதிகபட்சமாகவும், ஆறு மாதங்களுக்குக் குறையாமலும் சிறைத் தண்டனை விதிக்கப்படும். குறைந்தபட்சமாக 10 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 50 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தடையை தொடர்ந்து மீறுவோருக்கு கூடுதல் அபராதத்துடன், ஒவ்வொரு நாளும் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து தண்டனை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version