எனது பலம், பலவீனம் அனைத்தும் நீதான் என்று கேஜிஎப் நடிகர் யாஷ், தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கன்னட நடிகர் யாஷ், கடந்த 2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கிய “கேஜிஎப்” படத்தில் நடித்ததை அடுத்து உலகம் முழுவதும் ரசிகர்கள் பலரால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நடிகராக வலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து, “கேஜிஎப்” இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் எதிரியாக நடித்து வருகிறார். அடுத்தாண்டு ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
“கேஜிஎப்”பின் முதல் பாகத்தில் தாயின் சொல்லை மந்திர சொல்லாக கையில் எடுத்து அவர் நடித்தது மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கும். இதேபோல் நிஜ வாழ்க்கையில் தனது மகளுடனான தந்தையின் அன்பை வெளிப்படுத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளை தூக்கி கன்னத்தில் முத்தமிடுவது போல் புகைப்படம் வெளியிட்ட நடிகர் யாஷ், “உனக்கு அப்பாவாக இருப்பது எனக்குள் ஒரு மென்மையான பக்கத்தை வெளியே கொண்டு வந்துள்ளது. எனது பலம், பலவீனம், எல்லாம் அனைத்தும் நீதான் என்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் இளவரசி” என்று குறிப்பிட்டுள்ளார்.