அதிமுக பொதுக்குழுத் தீர்மானங்களுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

chennai highcourt

கடந்த வருடம் 2022ல் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுத் தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது. இதற்கு பன்னீர்செல்வத்தின் ஆதாரவாளர்கள் உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழுத் தீர்மானத்திற்கு தடைவிதிக்குமாறு வழக்குத் தொடுத்து இருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி  பொதுக்குழுத் தீர்மானம் செல்லாது என்று தீர்ப்பளித்தார். பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கை மேல்முறையீடு செய்தார்கள். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுகவின் பொதுக்குழுத் தீர்மானங்கள் செல்லும் என்று அதிரடியான தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. பொதுக்குழுவின் தீர்மானத்தின் முக்கியமான சாரம்சம் கட்சியின் போக்கிலிருந்து பிசகி துரோகம் இழைத்த  பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்பது ஆகும்.

இந்த உத்தரவிற்கு பிறகும் பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் மீண்டும் பொதுக்குழுத் தீர்மானத்திற்கு தடை விதிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றினைத் தாக்கல் செய்தனர். அதற்கான விசாரனை இன்று மார்ச் 17 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. மனுவினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்டத் தீர்மானங்களுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 11 ஆம் தேதி ஒத்துவைத்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான இன்பதுரை அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், பொதுக்குழு செல்லும்.ஆனால் தீர்மானங்கள் செல்லாது என ஊடகங்கள் மூலம் பேசி வந்த அதே ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்த புதிய மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது என்று கூறியுள்ளார்.

Exit mobile version