சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு தீ வைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதிக்கு தீ வைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்திலேயே அதிக பரப்பளவு கொண்ட வனப்பகுதியாக விளங்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளும் பலவகை அரிய மரங்கள், மூலிகைகளும் அதிகளவில் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இங்கு மரம், செடி, கொடிகள் காய்ந்து கிடப்பதால், எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. இதனால் தீத்தடுப்பு கோடு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ப்போர், பீடி, சிகரெட் துண்டகளை வீசி செல்வதால், வனப்பகுதிகளில் தீவிபத்து ஏற்படுகிறது. இதனால், வனவிலங்குகள், அரியவகை மரங்கள் பாதிக்கும் சூழல் உள்ளது.

வனப்பகுதியில் இத்தகைய தீவிபத்தை ஏற்படுத்துவோரை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வனப்பகுதிகளில் தீவைப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version