தேர்வுக்கான வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன் ஷேர்சாட் என்னும் செயலியில் 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு காலாண்டுத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்துத் தேர்வுக்கு முன் வினாத்தாளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் வினாத்தாளைக் கவனத்துடன் கையாள வேண்டும் எனவும், வினாத்தாள் முன்கூட்டி வெளியிட்டதாகப் புகார் வந்தால் தொடர்புடைய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.