ஸ்மார்ட் டிவி மூலம் இணையத்தில் பரவிய அந்தரங்க வீடியோ..எப்படி நடந்தது இந்தக் குற்றம்?

கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அந்தரங்க வீடியோக்கள், அவரது வீட்டில் இருந்த ஸ்மார்ட் டிவி மூலம் இணையத்தில் பரவிய சம்பவம், கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எப்படி நடந்தது இந்தக் குற்றம்?

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த திருமணமான இளைஞர் ஒருவர், அயல்நாட்டில் தங்கி வேலைபார்த்து வருகிறார். அவர் சில வாரங்கள் முன்பு தனது கணினியின் மூலம், தனது மனைவியுடன் ஸ்கைப்பில் உரையாடியுள்ளார். பின்னர், இணையத்தில் வந்த விளம்பரம் ஒன்றில் இருந்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துள்ளார். அப்போது, அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில், அவரது மனைவி உடைமாற்றுவது உள்ளிட்ட அந்தரங்கக் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவர் தனது மனைவியிடம் இது பற்றிக் கேட்டபோது, அவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. இதனால், தங்கள் படுக்கை அறையில் யாரோ ரகசியமாக கேமரா பொருத்திவிட்டதாகவே இருவரும் பயந்தனர்.

இந்நிலையில், கேரளாவில் உள்ள மனைவியின் புகைப்படங்கள் எப்படி இணையத்திற்கு எப்படி வந்திருக்கும் என்று யோசித்த இளைஞர், அயல்நாட்டில் இருந்தபடியே கேரள சைபர் கிரைம் காவல் பிரிவில் புகார் அளித்தார்.

கேரளாவில் உள்ள இளைஞரின் வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்த காவல்துறையினர், படுக்கையறையில் உள்ள ஸ்மார்ட் டிவி மூலம் இருவரும் ஸ்கைப்பில் உரையாடும் வழக்கத்தை வைத்துள்ளதையும், அந்த உரையாடல் முடிந்த பின்னரும் மனைவி ஸ்மார்ட்
டிவியின் இணைய இணைப்பை துண்டிக்காததால், இணைய ஹேக்கர்கள் ஸ்மார்ட் டிவியின் கேமரா மூலம் அந்த அறையில் நடப்பது அனைத்தையும் படம் பிடித்து, அதே ஸ்மார்ட் டிவி மூலம் அந்தரங்கக் காட்சிகளை இணையத்தில் பரப்பியதையும் கண்டறிந்தனர்.

கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் சூரத் நகரைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதிக்கும் இதேதான் நடந்தது. இன்னும் எத்தனை வீடுகளில் பெண்கள் இப்படியாகக் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு போன்கள் ஆகியவை ஹேக் செய்யப்படும் போது, அவற்றில் உள்ள கேமரா உள்ளிட்ட அனைத்து சாதனங்களையும் ஹேக்கர்கள் பயன்படுத்தலாம். எனவே இவற்றைப் பயன்படுத்துபவர்களும் ஸ்மார்ட்டாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம். படுக்கையறைகளில் இவற்றைப் பயன்படுத்தாமலேயே இருப்பது சிறந்தது.

Exit mobile version