3ஆம் வகுப்பு சிறுமியை அடித்து துன்புறுத்திய தனியார் பள்ளி ஆசிரியை

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயிலும் சிறுமியை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்த ஆசிரியை மீது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

செம்மஞ்சேரியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வெட்டுவாங்கேணியை சேர்ந்த ஜவகரின் இரண்டு குழந்தைகள் படித்து வருகின்றனர். 3 ஆம் வகுப்பு படிக்கும் தனுஸ்ரீ பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது சோர்வாக இருந்துள்ளார். இது பற்றி விசாரித்ததில் ஆசிரியை ரஜிதா தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும், தரையில் அமரவைத்தும், மற்ற மாணவிகளுடன் பேசக் கூடாது என கூறுவதாகவும் தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இது பற்றி பள்ளி முதல்வரிடம் கேட்க சென்ற தனுஸ்ரீயின் பெற்றோரை அவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனுஸ்ரீயின் தாயார் சசி, செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசி, பள்ளி நிர்வாகத்தால் தனது குழந்தை தனுஸ்ரீ மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
 

Exit mobile version