கீழடி அகழாய்வு: கடந்து வந்த பாதை

கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கும் நிலையில், கீழடி தொல்லியல் ஆய்வுகள் பற்றி ஒரு சிறப்பு தொகுப்பு.

கீழடி அகழாய்வு – முதல் கட்டம்
 
கீழடியில் முதல்கட்ட அகழாய்வு கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கியது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு இந்த அகழாய்வை மேற்கொண்டது. இந்த அகழாய்வில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் நிகழவில்லை என்றாலும், அடுத்தடுத்த அகழாய்வுகளை எங்கெங்கு நடத்துவது என்று இந்த அகழாய்வின் போதுதான் திட்டமிடப்பட்டது.

கீழடி அகழாய்வு – இரண்டாம் கட்டம்
 
கீழடியில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் இரண்டாம் கட்ட அகழாய்வு கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதியன்று தொடங்கியது. இந்த அகழாய்வில் மருத்துவ குடுவைகள், பழங்கால உறை கிணறுகள், தொழிற்சாலை அமைப்பு, அரசு முத்திரை உள்ளிட்ட பல முக்கிய வரலாற்று ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.
 
இரண்டாம் கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுப் பொருள்கள் கிடைத்தன. பின்னர் இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இவை 2,200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை என்பது கண்டறியப்பட்டது. இதனால் சங்க காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த நகரங்களில் ஒன்று முதன்முறையாகக் கண்டறியப்பட்டதாக உலகத் தமிழர்கள் கீழடியைக் கொண்டாடத் தொடங்கினர்.

கீழடி அகழாய்வு – மூன்றாம் கட்டம் :
 
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 2017ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கின. இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் அந்த ஆய்வுக் குழுவுக்கு தலைமை தாங்கினார். இந்த அகழாய்வு 2017 செப்டம்பரில் நிறைவடைந்தது. மூன்றாம் கட்டப் பணியில் 400 சதுர மீட்டர் அளவுள்ள 16 அகழாய்வுக் குழிகள் தோண்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

கீழடி அகழாய்வு – நான்காம் கட்டம்
 கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வில் மத்திய தொல்லியல்துறை மெத்தனம் காட்டுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், நான்காம் கட்ட அகழாய்வை மேற்கொள்ளும் பொறுப்பை தமிழக அரசே ஏற்றது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் கீழடி அகழாய்வுக்கு 55 லட்ச ரூபாய் நிதியும் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, 2018 ஏப்ரலில் தமிழக தொல்லியல்துறையின் நான்காம் கட்ட அகழாய்வு, திட்ட இயக்குநர் சிவானந்தம் தலைமையில் தொடங்கியது.
 
உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இந்த அகழாய்வில் மொத்தம் 5,820 பொருட்கள் கிடைத்தன. நான்காம் கட்ட அகழாய்வில் பெறப்பட்ட 6 மாதிரிகள் ஐக்கிய அமெரிக்காவின் பீட்டா அனாலிடிக் என்ற தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த ஆய்வுகளில் பதினோரு அடி ஆழத்தில் கிடைத்த ஒரு மாதிரி கி.மு. 580 ஆம் ஆண்டை சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டது.
 
நான்காம் கட்ட அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களில் உள்ள எழுத்து வடிவங்கள் சிந்து சமவெளி நாகரிக எழுத்து வடிவம் மற்றும் தமிழி எழுத்து வடிவங்களுக்கு இடையில் உள்ள தொடர்பை உலகுக்குக் காட்டின.

கீழடி அகழாய்வு – ஐந்தாம் கட்டம்
 
2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழக தொல்லியல்துறை கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கியது. ஐந்தாம் கட்ட அகழாய்வில் எலும்புகளால் செய்யப்பட்ட எழுத்தாணி, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, பானை ஓடுகள், சதுரங்கக் காய்கள், பகடைக் காய்கள், கறுப்பு சிவப்பு நிறப் பானை ஓடுகள், தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.
 
குறிப்பாக 520க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், சுடு மண்ணாலான 13 மனித உருவங்கள், 35 காதணிகள், மூன்று விலங்கு உருவங்கள் இங்கு கிடைத்தன. இங்கும் தமிழி அல்லது தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடுகள் கண்டறியப்பட்டு உள்ளன.
 
மிக முக்கியமாக, கீழடி தொல்லியல் களமானது 2600 ஆண்டுகள் பழமையானது என்பதும், கி.பி.600ஆம் ஆண்டில் வைகை நதியில் ஒரு தமிழ் நாகரிகம் செழித்து வளர்ந்திருந்தது என்பதும் இந்த அகழாய்வில் உறுதியாகின. இதனால் கீழடி அகழாய்வை தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் உற்றுநோக்கும் நிலை ஏற்பட்டது.

நடப்பாண்டு தமிழக பட்ஜெட்டில் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் அமைக்க 12 கோடியே 21 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அத்தோடு கிழடியில் ஆறாம் கட்ட அகழாய்வையும் தமிழக தொல்லியல் துறை முன்னெடுத்துள்ளது. இவற்றால், உலக தொல்லியல் ஆர்வலர்களும், உலகத் தமிழர்கள் அனைவரும் வைகை நதி நாகரிகம் செழித்து வளர்ந்த தொட்டிலான கீழடியின் ஆறாம்கட்ட அகழாய்வு உலகுக்குச் சொல்லப் போகும் செய்திகளை அறிய ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Exit mobile version