கர்நாடகாவில் வெள்ளம் சூழ்ந்த இடத்தில் பாலத்தின் குறுக்கே சிக்கிய ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு 12 வயதேயான சிறுவன் ஒருவன் தைரியமாக நீந்தி, வழிகாட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதனால் ராய்ச்சூர் மாவட்டத்தில் ஹிரேராயன்கும்பி என்ற கிராமத்தில், ஒரு பாலம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில் உயிரிழந்த ஒரு பெண்மணி மற்றும் 6 குழந்தைகளை சுமந்தபடி ஆம்புலன்ஸ் ஒன்று அங்கு வந்தது. அவர்கள் பாலம் கண்ணுக்குத் தெரியாத நிலையில், நீரில் சிக்கித் தவித்தனர். இதைப் பார்த்த 6 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் வெங்கடேசன், ஆபத்தைக் கருதாமல் தண்ணீரில் குதித்து ஆம்புலன்சிற்கு வழிகாட்டினார்.
சிறுவனின் இந்த வீரச் செயல் வீடியோவாக எடுக்கப்பட்ட நிலையில் அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ராய்ச்சூர் மாவட்ட அதிகாரிகள், வெங்கடேஷிற்கு துணிச்சலுக்கான விருது வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.