இலங்கை நாடாளுமன்றம் செப்டம்பர் 14ஆம் தேதி கூடும் என அதிபர் சிறிசேன அறிவித்து இருக்கிறார். இலங்கையின் அரசு உச்சகட்ட குழப்பத்தில் உள்ள இன்றைய சூழலில், சொன்ன நாளில் இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்படுமா? அங்கு உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா? ரணில் பிரதமராக நீடிப்பாரா? ராஜபக்ச பிரதமராக ஏற்கப்படுவாரா?- எனப் பல கேள்விகள் இலங்கை அரசியல் களத்தில் சுழன்று கொண்இருக்கின்றன. என்னதான் நடக்கிறது இலங்கையில்? – விரிவாகப் பார்ப்போம்.
கடந்த 2015ஆம் ஆண்டில் 225 எம்.பி.க்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவின் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 106 இடங்களைக்கைப்பற்றியது. ராஜபக்ச-சிறிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியினர் 95 எம்.பி.க்களைப் பெற்றனர். ஆட்சி அமைக்கத் தேவையான 113 இடங்கள் என்கிற அறுதிப் பெரும்பான்மையை யாருமே பெறாத நிலையில், இரண்டு அணியினரும் இணைந்து ஆட்சி அமைத்தனர். ரணில் விக்கிரமசிங்கே அங்கு பிரதமரானார். 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.
இந்நிலையில், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அதிபர் சிறிசேன கோரினார், ஆனால் அதனை ஏற்க ரணில் மறுத்துவிட்டார்.
இதன் பின்னர் இலங்கையின் கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும், இசுலாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், பிரதமர் ரணிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு துறையை பறித்து அதிபர் சிறிசேன உத்தரவிட்டார். இது இரு கட்சியினரிடையே கடும் பகையை உருவாக்கியது.
அந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது, ராஜபக்சவின் இலங்கை மக்கள் முன்னணி கட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அந்தத் தீர்மானம் அது தோல்வி அடைந்தது.
பின்னர், சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் பிரதமர் விக்ரமசிங்கேவின் கட்சிக்கு உரிய மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேன பகிரங்கமாக கொலை முயற்சி குற்றம் சாட்டினார். இதனால் பிரதமர் – அதிபர் இடையே மீண்டும் அதிருப்தி எழுந்தது.
இந்தச் சூழலில்தான் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி ரணிலுடன் கூட்டணி முறிவை அறிவித்ததோடு, அவரைப் பிரதமர் பதவியில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தார் அதிபர் சிறிசேன. அத்தோடு இலங்கையின் முன்னாள் அதிபரும், இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளானவருமான ராஜபக்சவை அழைத்துப் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார் சிறிசேன.
ஆனால் அது ஏற்கத்தக்க பதவிப் பிரமாணமாக இல்லை. ஏனெனில் பேரவையில் ராஜபக்சவுக்குப் பெரும்பான்மை இல்லை. இதனால் பிரதமராக பதவியேற்ற ராஜபக்ச உடனே அதரவைப் பெருக்கும் வேலைகளில் ஈடுபட்டார். அதன் விளைவாக வசந்தா சேனநாயகே, ஆனந்தா அழுதகாமகே ஆகிய இரு எம்.பி.க்கள் ராஜபக்சவுக்கு ஆதரவு அளித்தனர்.
ஆனால், தமிழ் தேசிய கூட்டணியின் 16 எம்.பி.க்களும், ஜனதா விமுக்தி பெரமுனா, கம்யூனிட்ஸ்ட் கட்சிகளின் 6 எம்.பி.க்களும் நடுநிலை வகித்தனர். இவர்கள் ராஜபக்ச பிரதமராக வருவதை விரும்பவில்லை. இவர்களில் தமிழ்த் தேசிய கூட்டணியின் ஆதரவைப் பெற ராஜபக்ச, ரணில் ஆகிய இரண்டு தரப்பும் முயற்சி செய்தன.
அந்நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டினால் ரணில் வெற்றி பெற்று, ராஜபக்ச தோல்வியடையக்கூடும் என்பதால் நவம்பர் 5ஆம் தேதி கூட வேண்டிய இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்கி வைப்பதாக அதிபர் சிறிசேன அக்டோபர் 27 அன்று அறிவித்தார். இது உலக அளவில் இலங்கை அரசு மீது கடும் அதிருப்தியை உருவாக்கியது.
மேலும் ‘ராஜபக்சதான் இலங்கையின் பிரதமர்’ என்று அதிபர் சிறிசேன ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். ரணிலுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் ரணில் அதிபர் மாளிகையை காலி செய்ய மறுத்துவிட்டார்.
இந்நிலையில் அக்டோபர் 28ஆம் தேதி இலங்கையின் சபாநாயகர் கரு ஜெயசூர்யா,
’இலங்கையின் அதிகாரப்பூர்வ, சட்டப்படியான பிரதமர் ரணில் விக்ரசிங்கேதான் என்பதை அங்கீகரிக்கிறேன். நாடாளுமன்றத்தை நீட்டித்து அறிவிப்பதும், முடக்குவதும் சபாநாயகருடன் கலந்து பேசித்தான் அதிபர் முடிவு எடுக்க முடியும். நாடாளுமன்றத்தில் வேறுஒருவர் பெரும்பான்மையை நிரூபிக்காத வரை ரணிலுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்’ – என்று அறிவிக்க, அது ரணில் தரப்புக்கு கூடுதல் பலத்தைத் தந்தது.
அதனைத் தொடர்ந்து ரணில்,
இலங்கை அரசமைப்புச்சட்டத்தின் 42-வது பிரிவின்படி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கும் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் மட்டுமே பிரதமராக நியமிக்கப்பட முடியும் என்றும், அந்தவகையில் தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதாகவும் தானே இலங்கையின் பிரதமராக நீடிப்பதாகவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் கூறினார். இலங்கையின் 19ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் ரணிலின் வாதத்துக்கு ஆதரவாக இருந்தது. அதென்ன 19ஆவது திருத்தம்?
கடந்த 2015-ம்ஆண்டுதான் இலங்கையில் 19-வது அரசமைப்புச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி இலங்கையின் அதிபர் தனது விருப்பத்தின்படி பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியாது. மேலும், பிரதமர் மட்டுமே தனது அமைச்சரவையைக் கலைக்க முடியும், அல்லது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும்.
எந்த அமைச்சரை நீக்க பிரதமர் பரிந்துரைக்கிறாரோ அவரை நீக்கும் அதிகாரம் மட்டும் அதிபருக்கு இருக்கிறது. அதிலும் பிரதமரின் ஆலோசனையைப் பெற்றுதான் அதிபர் செயல்பட முடியும்.
இப்படி ஒரு திருத்தம் உள்ளபோது, அதைக் கொண்டுவந்த சிறிசேனவே அதை மதிக்காதது உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும், ஐ.நா. சபையும் தொடர்ந்து கொடுத்த அரசியல் அழுத்தங்களால் நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரையில் கூட்ட விதித்த தடையை நவம்பர் 1ஆம் தேதி திரும்பப் பெற்றார் அதிபர் சிறிசேன. இதனைத் தொடர்ந்து நவம்பர் 5ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்பாகப் பேசிய சபாநாயகர் கரு ஜெயசூர்ய பாராளுமன்றம் நவம்பர் 7ஆம் தேதியன்று கூட்டப்படலாம் எனத் தெரிவித்தார்.
என்றைக்கு நாடாளுமன்றம் கூடும் என்றே தெரியாத சூழலில், தனது தரப்பை பலப்படுத்த தமிழ் தேசியக் கூட்டணியின் ஒரு எம்.பி.யை ராஜபக்ச வளைத்தார். அணி மாறிய எம்.பி. வியாழேந்திரனுக்கு உடனடியாக அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டணியின் பிற எம்.பி.க்கள் யாரும் அணி மாறவில்லை. ஆனால், ரணில் ஆதரவு எம்.பி.க்கள் சிலரையும் ராஜபக்ச தரப்பு வளைத்துவிட்டதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் கூறின.
இதனை அடுத்து எதிர்க்கட்சிகள், ’சிறிசேன நாடாளுமன்றம் கூடும் தேதியை அறிவிக்காததால்தான் இவ்வளவு அரசியல் குழப்பங்களும் ஏற்படுகின்றன’ – என்று குற்றம் சாட்டின. 21 தமிழ் எம்.பி.க்கள் ராஜபக்ச தரப்பை எதிர்த்து வாக்களிக்க உள்ளதாகக் கூறினர். இலங்கை அரசு மீதான பன்னாட்டு அழுத்தமும் கூடியது.
இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி, ஞாயிறு இரவில் ஒரு புதிய அறிவிப்பை சிறிசேன வெளியிட்டார். அதில் இலங்கை நாடாளுமன்றம் 10 நாட்கள் கழித்து நவம்பர் 14ஆம் தேதி காலை பத்து மணிக்கு கூட்டப்படுவதாகக் கூறப்பட்டு உள்ளது. இந்தத் தாமதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் உள்ளிட்டோர் கண்டித்து உள்ளனர்.
அந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று ராஜபக்ச தரப்பு நினைக்கிறது. அதற்கு ‘தமிழர்கள் விடுதலை’ – என்ற புதிய முழக்கத்தை ராஜபக்ச தரப்பு கையில் எடுத்துள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போர் முடிவடைந்த பின்னர், போரில் சரணடைந்த, பிடிபட்ட பல்லாயிரம் தமிழர்களை நாட்டின் பல்வேறு சிறைகளில் ராஜபக்ச அரசு முன்னர் அடைத்து வைத்தது. பின்னர் வந்த சிறிசேன அரசும் அவர்களை விடுதலை செய்யவில்லை. எவ்வித விசாரணையுமின்றி இப்படி பல ஆண்டுகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை விடுவிக்க தமிழ்த் தேசியக் கூட்டணியினர் உள்ளிட்ட தமிழ் எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 4ஆம் தேதியன்று ராஜபக்சவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச, ’நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேன மற்றும் பிரதமர் ராஜபக்ச ஆகியோர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர்’ – என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் கட்சித்தாவல் தடைச் சட்டம் இல்லாதநிலையில் ஒவ்வொரு நாளும் அங்கு அரசியல் நிலவரம் மாறக்கூடும். யார் வேண்டுமானானும் எந்தப் பக்கத்திற்கும் செல்லலாம் என்பதால் இலங்கையின் அரசுச் சிக்கல் தினம்தோறும் பல மாற்றங்களைச் சந்திக்கின்றது.
தமிழ்ப் போராளிகள் விடுவிக்கப்படுவார்களா? தமிழ் எம்.பி.க்கள் ஆதரவு யாருக்கு? – என்ற இரு பெரும் கேள்விகளை இலங்கையின் இன்றைய அரசியல் சூழல் எழுப்பி உள்ளது. இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்று உரக்கக் கூறிவரும் தமிழக மக்களும் இலங்கையின் அரசியல் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். காலத்தின் பதிலுக்காகக் காத்திருப்போம்.
Discussion about this post