தெலங்கானா மாநிலத்தில் அடுத்தடுத்த ஏற்பட்ட ரயில் விபத்துக்களில் 35 பேர் காயமடைந்தனர்.
தெலுங்கானாவின் கச்சிகுடா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த கோவை – டெல்லி கொங்கு விரைவு ரயில் மீது, புறநகர் ரயில் வேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 30 பயணிகள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் காயமடைந்தவர்களை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விசாரணையில் சிக்னல் கோளாறால், நின்று கொண்டிருந்த கொங்கு விரைவு ரயில் மீது பயணிகள் ரெயில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள், உடைந்த பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து நீக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய புறநகர் ரயிலின் ஓட்டுநர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
அதேபோல் ஐதராபாத் நகரில் லிங்கம்பள்ளியில் இருந்து பலக்னுமா செல்லும் ரெயிலின் 3 பெட்டிகள் மற்றும் கர்னூல் நகரில் இருந்து செகந்திராபாத் செல்லும் ஹண்ட்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 4 பெட்டிகளும் தடம் புரண்டன. இதில் 5 பேர் காயமடைந்தனர்.
Discussion about this post