96 திரைப்படம் வெளிவருவதற்கு முன்னதாக சந்தித்த பிரச்னைகள் – பரபரப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள 96 என்ற திரைப்படம் வெளிவருவதற்கு முன்னதாக சந்தித்த பிரச்னைகள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் உள்ள விஷால், விஜய் சேதுபதி படத்திற்கு முட்டுக்கட்டை போட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட திரைப்படம் 96. விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், த்ரிஷா கதாநாயகியாவும் நடித்துள்ள இத்திரைப்படம் இம்மாதம் 4-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தின் தயாரிப்பாளரும், மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான நந்தகோபால் என்பவர், நடிகர் விஷாலுக்கு 3 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது.

திரைப்படம் வெளிவருவதற்கு முதல்நாள் அந்த தொகையை கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று நடிகர் விஷால் நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. விடிந்தால் படம் திரையரங்களுக்கு கொடுக்க வேண்டிய சூழலில், என்ன செய்வது என்று தெரியாமல் தயாரிப்பாளர் நந்தகோபால் தடுமாறியுள்ளார். விஷாலிடம் சமாதான தூது விடுத்த போதும் அந்த முயற்சிகளை கைகூடவில்லை என்பதால் விஷயத்தை கதாநாயகன் விஜய் சேதுபதியிடம் கொண்டு போயுள்ளார் தயாரிப்பாளர் நந்தகோபால்.

இதற்கிடையில் படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்தானது. இதனால் தயாரிப்பாளர் மனஉளைச்சல் அடைய, விஜய் சேதுபதி, விஷால் தரப்பை தொடர்பு கொண்டுள்ளார். தயாரிப்பாளர் நந்தகோபால் தரவேண்டிய 3 கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்தாக கூறியுள்ளார். முதற்கட்டமாக ஒன்றரை கோடி ரூபாயை ரொக்கமாக தந்துள்ளார் விஜய் சேதுபதி. எஞ்சிய ஒன்றரை கோடி ரூபாய்-க்கு கடன் பத்திரம் ஒன்றையும் எழுதி தந்துள்ளார். இதன்பிறகே 96 திரைப்படத்தின் கேடிஎம் என்ற மென்பொருள் திரையரங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பிற்பகல் காட்சிகளாக 96 திரைப்படம் வெளியானது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. விஷால் செய்தது தவறு என்றும், சக நடிகரின் திரைப்படம் வெளிவருவதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கொண்டே விஷால் நெருக்கடி கொடுத்திருக்கக் கூடாது என்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கங்களில் விஜய் சேதுபதி ரசிகர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து விஜய் சேதுபதியை தொடர்பு கொண்ட விஷால், தன்னைப் போல் விஜய் சேதுபதியும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டாம் என்றதோடு வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை திருப்பி தந்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் நந்தகோபாலிடம் பின்னர் வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் விஷாலுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகம் எழவே, விஜய் சேதுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் மட்டுமல்லாது பெரும்பாலான நடிகர்கள், படம் வெளியாகும் வேளையில் சந்திக்கும் பிரச்னைதான் இது என்றார். தனிப்பட்ட முறையில் யார் மீதும் வருத்தமோ, கோபமோ இல்லையென்றும் பொருளாதார சதுரங்கப் பலகையில் தானும் ஓர் காயாக பயன்படுத்தப்பட்டதாக கூறினார்.

ஒட்டுமொத்தமாக தமிழ் திரைப்படங்கள் வெற்றி பெற்று, லாபகரமான துறையாக மாற வேண்டும் என்பது தான் இத்துறையில் உள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் தற்போது இதில் நிலவும் சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதும் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version