கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் கேஆர்எஸ், கபினி அணைகளுக்கு நீர் வரத்தும், அந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அருவியில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை இன்றும் நீடிக்கிறது. ஆற்றில் பரிசல் இயக்க அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7ஆயிரத்து 812 கன அடியாகக் குறைந்துள்ளது. இதனால் 15 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் தனது முழுக் கொள்ளளவான 120 அடியிலிருந்து 119.94 அடியாகக் குறைந்துள்ளது. நீர் இருப்பு 93.37 டிம்.எம்.சியாக இருக்கும் நிலையில் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.