71 இடங்களில் 97 பேரிடர் மீட்பு குழு!

மழை வெள்ள ஆபத்துக்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக நாடு முழுவதும் 71 இடங்களில் 97 பேரிடர் மீட்பு குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பருவ மழைக்காலம் தற்போது தொடங்கி உள்ளதால், மழை வெள்ள ஆபத்து பகுதிகள் கண்டறியப்பட்டு, மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக பேரிடர் மீட்புக் குழுவினர் நாடு முழுவதும் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அதன்படி, நாடு முழுவதும் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக 100 பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக, 14 மாநிலங்கள் உள்பட்ட 71 இடங்களில், பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 97 குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தலா 45 பேர் வீதம், மொத்தம் 4 ஆயிரத்து 500 பணியாளர்கள்  மீட்பு பணியில் இடம் பெற்றுள்ளனர். தேவை ஏற்படும்பட்சத்தில், தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து மீட்பு பணிக்கு செல்வதற்காக கூடுதல் குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில், உள்ள தேசிய பேரிடர் மீட்புக் கழக கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும், மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தொடர்பில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Exit mobile version