500 மரக்கன்றுகளை நட்டு சோலையாக மாற்றிய 70 வயதான விவசாயி

கோபிசெட்டிபாளையத்தில் சுமார் 500 மரகன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார் 70 வயதான விவசாயி நல்லசாமி. மரத்தின் அருமையையும், பயனையும் மக்களுக்கு எடுத்துரைக்கிறார். இதைப்பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

இந்த பெருமையும் பாராட்டும் 70 வயதான நல்லசாமியைத் தான் சேரும்.கோபிசெட்டிபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் தேர்வுதளம் அமைந்துள்ள இடத்தில், மரங்கள் நிறைந்து பசுமையான காட்சியைப் பார்க்க முடிகிறது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்த நல்லசாமி, ஓட்டுநர் உரிமம் பெற வரும் மக்கள் நிழலுக்கு கூட ஒதுங்க இடம் இன்றி தவிப்பதைக் கண்டார்.

இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலரின் அனுமதி பெற்ற நல்லசாமி, சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு ,அதனை வளர்த்துள்ளார். தற்போது அந்த இடத்தை கண்ணுக்கு இனிய சோலையாக மாற்றியுள்ளார் நல்லசாமி.தற்போது இங்கு வேம்பு, வாகை, புங்கன், அரசமரம், மலைவேம்பு, மா, பலா என 40 வகையான 500 மரக்கன்றுகளை நட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காலை, மாலை இருவேளையும் இங்கு வரவில்லை என்றால் இரவு தூக்கம் வராது என்கிறார் நல்லசாமி. அமைதியான சூழல் நிலவுவதால் ஓட்டுநர் உரிமம் பெற வருபவர்கள் மன அமைதியுடன் வாகனங்களை இயக்குவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறுகிறார் இந்த 70 வயது முதியவர். தனக்கு என்று வாழாமல் பிறருக்காக வாழும் நல்லசாமியை என்றென்றும் பாராட்டுக்குரியவர்…

Exit mobile version