கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் உள்ள பில்லூர் அணையில், இதுவரை இல்லாத அளவிற்கு 68 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து உள்ளதால், உபரியாக பவானி ஆற்றில் வெளியேற்றபட்டு வருகிறது.
உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது. இதனையடுத்து, கரையோரங்களில் உள்ள மக்கள் அனைவரையும் மாவட்ட நிர்வாகம் முகாமில் தங்க வைத்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளை கோவை மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் சுரேஷ் நேரில் பார்வையிட்டார்.
வெள்ளப் பெருக்கு பகுதிகளில் அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர் வெள்ளப் பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்க தீயணைப்பு துறையினரும், வனத்துறையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இரவு நேரங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.