500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்படவில்லை -மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்படவில்லை என மக்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கிடைத்த பலன்கள் குறித்த மக்களவை உறுப்பினர்கள் அதல்ராவ் படேல் சிவாஜிராவ் மற்றும் தர்மேந்திர யாதவ் ஆகியோரின் கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலளித்தார். அதில் கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு, இந்திய ரிசர்வ் வங்கி முழு ஆதரவு வழங்கியதாக தெரிவித்தார்.

கடந்த 2014-15 ஆண்டுகளில் 411 கோடி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக 2016ல் கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்ததாகவும் அந்த பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆய்வை அடுத்தே பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டதாக அருண் ஜெட்லி தனது பதிலில் கூறியுள்ளார். இந்த புதிய 500 மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்படவில்லை என்றும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version