1947லிருந்து இந்தியாவில் 486 தொல்லியல் பொருட்கள் காணவில்லை..!

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து தற்போது வரை 486 தொல்லியல் ரீதியான பொருட்கள் காணவில்லை. குறிப்பாக, பழங்கால நாணயங்கள், செப்பேடுகள், ஆபரணங்கள், ஓவியங்கள் போன்ற பல பொருட்கள் எங்கு சென்றன என்றே தெரியவில்லை. முக்கியமாக காணாமல் போன அனைத்து பொருட்களும் ASI எனும் இந்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 3,696 அரண்மனைகள், கோவில்கள், கட்டிடங்கள் போன்றவற்றிற்குள் அடங்கும். ஏற்கனவே 292 தொல்பொருட்கள் இந்திய தொல்லியல்துறை மூலம் மீட்டெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தகவல் இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் அதிர்ச்சிகரத் தகவலாகப் பார்க்கப்படுகிறது. 

காணாமல் போன பழங்காலப் பொருட்கள் இந்தியாவைச் சேர்ந்த 17 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவை என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் இருந்து 139 பொருட்களும், ராஜஸ்தானிலிருந்து 95 பொருட்களும், உத்தரபிரதேசத்திலிருந்து 86 பொருட்களும் அதிகபட்சமாக காணாமல் போயிருக்கின்றன. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை யுனஸ்கோவே ஒரு அரியத் தகவலை பல வருடங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. அதாவது சுதந்திரத்திலிருந்து 1989 வரை 50,000ற்கு மேற்பட்ட ஓவியங்கள் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை அவ்வமைப்பு கூறியிருந்தது. 1972 ஆம் ஆண்டு Antiquities and Art Treasures Act என்பதை கொண்டுவந்து சில முக்கிய கலைப்பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டு வந்துகொண்டிருந்தன.

ஆனாலும் நம்மால் இன்னும் இந்தியாவிற்கு உரிய இன்னும் சில முக்கியமான பழங்காலப் பொருட்களை மீட்டெடுக்க முடியவில்லை. அங்கொன்று இங்கொன்று என்ற கணக்கில்தான் மீட்டெடுக்க முடிகிறது. கடந்த ஆண்டு 2022ல் மகாராஷ்டிரா மாநிலம் இந்திய தொல்லியல் துறையின் மூலம் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய வாள் ஒன்றினை இலண்டனில் இருந்து மீட்டிருந்தது. இன்னும் நமது பழம்பொருட்கள் நம்மீது ஏகாதிபத்தியம் செலுத்தியவர்களின் கையில் எவ்வளவு அளவிற்கு சிக்கியுள்ளன என்பது தெரியாது. ஆனால் அனைத்தையும் மீட்டெடுப்பது தொல்லியல் துறையின் தலையாய கடமை ஆகும்.

Exit mobile version