மதுரை மாநகர் பகுதியில் முதன்முறையாக 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை நகரின் மையப்பகுதியான முனிச்சாலை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த நடுகல்லை, கோயில் கட்டடக்கலை மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் தேவி அறிவுச்செல்வம், தொல்லியல் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் இது 400ஆண்டுகளுக்கு முந்தைய நாயக்கர் கால நடுகல் என்பது தெரியவந்துள்ளது.
போரில் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகல் அமைக்கும் வழக்கம் இருந்த நிலையில், உயிர் நீத்த வீரருடன், அவரது மனைவியும் உடன் கட்டை ஏறுதல் மூலம் உயிரிழந்ததன் நினைவாக இந்த நடுகல் அமைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரின் மையப்பகுதியில் நடுகல் கண்டறியப்படுவது இதுவே முதன்முறை என்கின்றனர் நடுக்கல் குறித்து ஆய்வு மேற்கொண்டவர்கள்.
இந்த நடுகல்லை அப்பகுதி மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.