கோவையில் நகைப் பட்டறை ஊழியரிடம் கொள்ளை: பெண் உள்பட 4 பேர் கைது

கோவையில், செவ்வாயன்று, நகைப் பட்டறை ஊழியரிடம் 845 கிராம் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட விவாகரத்தில், ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கடை வீதியில் நகைப்பட்டறையில் பணியாற்றி வரும் ராமமூர்த்தி என்பவர், தங்க நகைகளை தாராபுரம் எடுத்து செல்வதற்காக, கோவை ராம்நகர் வழியாக சென்ற போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ராமமூர்த்தி சென்ற பைக் மீது மோதி அவரை நிலைகுலைய வைத்தனர். பின்னர், கீழே விழுந்த அவருக்கு உதவுவது போல் நடித்து, அவரிடம் இருந்த 845 கிராம் நகைகள் இருந்த பையினை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், காட்டூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்ட நிலையில், கடையில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் பத்ரி என்பவர், திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும், இதில் அவரின் நண்பர்கள் ராஜா, டேனியல், சங்கீதா உள்ளிட்டோர் உதவியதும் தெரியவந்தது.

பின்னர், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்ட போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர், மேலும் இது தொடர்பாக மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Exit mobile version