4 ஆண்டுகளை கடந்தும் வெற்றிகரமாக இயங்கும் மங்கள்யான்!

செவ்வாய் கிரகத்தை ஆராய்வற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட மங்கள்யான் வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை கடந்தும் நல்ல முறையில் இயங்கி வருகிறது.

2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம், 298 நாட்கள் பயணித்து 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அன்று துவங்கி தற்போது வரை 980-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை மங்கள்யான் எடுத்து அனுப்பி வருகிறது.

முதல்முயற்சியிலேயே வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் செலுத்திய நாடு என்ற பெருமை மங்கள்யான் மூலம் இந்தியாவுக்கு கிடைத்தது. மிக குறைந்த பொருட்செலவில் அதாவது 450 கோடி ரூபாயில் மங்கள்யான் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆறுமாத காலத்திற்கு மங்கள்யான் செயல்பாட்டில் இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பயலாலு என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ஐடிஎஸ்என் மற்றும் பெங்களுரில் செயல்பட்டு வரும் ஐஎஸ்டிஆஏசி ஆகிய அமைப்புகள் வாயிலாக மங்கள்யான் செயல்பாட்டை இஸ்ரோ கண்காணித்து வருகிறது. செவ்வாய் கிரகம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு மங்கள்யான் எடுத்த புகைப்படங்கள் மூலம் தெளிவு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version