குடிப்பழக்கம் இல்லாத 30% பேர் கல்லீரல் பிரச்சினைகளால் பாதிப்பு

குடிப்பழக்கத்தினால் கல்லீரல் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று பரவலாக கூறப்படும் நிலையில், உலகெங்கிலும் குடிப்பழக்கம் இல்லாத போதிலும் 30 சதவிகிதம் பேர் கல்லீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்…

நமது உடலில் அனைத்து உறுப்புகளும் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வந்தாலும், உடலின் நச்சுக்களை நீக்குவதன்மூலம் கல்லீரல் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது. ஆனால், தவறான உணவுப்பழக்கம், குடிப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களால், நாம் நம்முடைய கல்லீரலை பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறோம்.

பரபரப்பான வாழ்க்கை முறையையும் இதற்கு காரணமாக கூறலாம். நம்முடைய உடல் இயக்கத்தை சீரான முறையில் பாதுகாக்காமல் அக்கறையின்றி செயல்பட்டால் கல்லீரல் வீக்கம் மட்டுமின்றி கல்லீரல் புற்றுநோக்கும் ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

குடிப்பழக்கம் உள்ளிட்டவற்றால் மட்டுமே கல்லீரல் வீக்கம் போன்றவை வரும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், குடிப்பழக்கமே இல்லாவிட்டாலும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இவ்வாறு 30 சதவிகிதம் பேர் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகையோருக்கு கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகெங்கும் NON Alcoholic Hepatitis தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றால் இத்தகைய கல்லீரல் பாதிப்பிலிருந்து விடுபட முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நம்முடைய உடலில் முக்கிய உறுப்பாக வலம்வரும் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் வீக்கம் ஏற்பட்டு, பலரின் உயிருக்கே உலைவைத்துவிடும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றை முறைப்படுத்திக் கொள்ளவும் ஆலோசனை வழங்குகின்றனர். மேலும் முறையான பரிசோதனைகள் மூலமும் தங்களின் கல்லீரலை பாதுகாத்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப, நோய் வருவதற்கு முன்னதாகவே நாம் விழிப்புடன் செயல்பட்டு நம் உடல் உறுப்புகளை பாதுகாத்து கொள்வதே நம்முடைய வாழ்க்கையை இனிமையாக கொண்டு செல்ல உதவும். இதன்மூலம் நம்முடைய வாழ்க்கையை குறைவற்ற செல்வமாக இனிமையாக நாம் அமைத்துக் கொள்ள முடியும்.

Exit mobile version