மகாராஷ்டிராவில் அணை உடைந்து காணாமல் போன 23 பேர் மரணமடைந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது.
தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிராவில் தீவிரமடைந்துள்ள நிலையில் மும்பை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ரத்னகிரி அருகில் உள்ள திவாரே அணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காணாமல் போன 23 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களாகியும் யாரும் திரும்பாததால் அவர்கள் இறந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அணையில் விரிசல் ஏற்பட்டிருந்ததாகவும், இதுதொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டிவிட்டதாகவும் உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.