23 சிங்கங்கள் இறப்பதற்கு நீங்களே காரணம்!- பாஜக மீது காங்கிரஸ் கோபம்

 

ஆசிய சிங்கங்களுக்கான புகலிடமாக குஜராத்தில் உள்ள கிர் காடுகள் அமைந்துள்ளன. 1,412 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இங்கு சாலைகள் அமைப்பது, கிராமங்கள் விரிவாக்கம் செய்யப்படுவது என மனித நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் சட்டவிரோத சுரங்கங்கள் தோண்டுவது மூலம் சிங்கங்களின் வாழ்விடங்கள் பாதிப்படைந்து உள்ளன.

கடந்த 2015ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கிர் காடுகளில் 523 சிங்கங்கள் இருந்தன.இந்த நிலையில், கடந்த 3 வாரங்களில் கிர் காடுகளில் வசித்து வந்த 23 சிங்கங்கள் உயிரிழந்து உள்ளன.

சிங்கங்கள் இறந்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது பட்டேல் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.அதில், சிங்கங்களின் வாழ்க்கை சூழலை புறக்கணித்தது மற்றும் மாநில அரசின் நீண்டகால தவறான நிர்வாகம் ஆகியவையே 23 சிங்கங்கள் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். கிர் தேசிய பூங்காவை சுற்றிய வாழ்க்கை சூழலுக்கான முக்கிய மண்டலங்களை அமைப்பதில் தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு குஜராத்தியாக கிர் காடுகளின் சிங்கங்கள் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பெருமையின் ஒரு பகுதி என்பதை நீங்களும் அறிவீர்கள் என்று அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version