சினிமாவும் எதிர்பார்ப்பும் 2023!

2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் மேலோங்கியுள்ளது. ஏற்கனவே பொங்கலுக்கு வாரிசு, துணிவு என்று இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்த வண்ணம் உள்ளது. தற்போது அதற்கு பிறகு என்னென்ன பெரியத் திரைப்படங்கள் மற்றும் இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.

2021ஆம் ஆண்டு மாநாடு திரைப்படம் மூலம் தனது திரை வெற்றியை வெகுநாட்களுக்குப் பிறகு பதிவு செய்த சிலம்பரசன், கடந்த 2022ஆம் ஆண்டில் வெந்து தணிந்த காடு திரைப்படம் மூலம் தனது வெற்றியை நிரந்தரமாக்கியுள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை இயக்கி இருப்பவர் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் இயக்குநர் ஒபிலியன் கிருஷ்ணா ஆவார்.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கெளதம் மேனன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் மைக்கேல். இந்தத் திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளத் திரைப்படம் தான் வாத்தி. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வியை வியாபாரம் ஆக்கிய அவலத்தை தட்டிக் கேட்கும் ஆசிரியராக தனுஷ் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அருண் விஜயின் பார்டர் திரைப்படம் ஈரம் இயக்குநர் அறிவழகன் மூலம் இயக்கப்பட்டு வெளியாகத் தயார் நிலையில் உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படமான ஜெயிலர் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தினை இயக்கிக் கொண்டிருப்பர் இயக்குநர் நெல்சன் ஆவார். இந்த திரைப்படத்தில் பல நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள். இதன் முன்னோட்டம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.  உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படமும் இந்த ஆண்டில் வெளியாக உள்ளது. நீண்ட நாள் கிடப்பில் இருந்தத் திரைப்படத்தின் சூட்டிங்கானது மின்னல் வேகத்தில் தொடங்கி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனை இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார். இந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது மேலும் பொன்னியின் செல்வன் வெற்றியினைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் இரண்டானது ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

Exit mobile version