சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் பயின்ற ஜெகன்மோகன், கடந்த 1975ஆம் ஆண்டு முதல் மந்தைவெளியில் ஒரு ரூபாய் கட்டணத்தில் சிகிக்சை அளிக்கத் தொடங்கினார். தற்போது வரை 20 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்தார்.
எந்தவித லாபமும் இல்லாத தன் க்ளினிக்கில் பணியாற்றும் செவிலியர்களுக்கு சம்பளம் வழங்கிவருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. குறைந்த கட்டணத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.
நாள்தோறும் சுமார் 300 பேருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் மருத்துவர் ஜெகன்மோகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 75.
இறப்பதற்கு முன்புவரை சிகிச்சை அளித்து வந்த அவரின் மறைவு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 ரூபாய் டாக்டர் என பெயர் பெற்ற ஜெகன்மோகனின் இறப்பு மந்தைவெளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் ஜெகன்மோகன் மிக குறைந்த கட்டணத்தில் எவ்வித நோயையும் எளிதில் குணப்படுத்துவார் என்றும், சில நேரங்களில் கிச்சைக்கு சொந்த பணத்தையும் கொடுத்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.