பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 109 மணிநேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட 2 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
பஞ்சாபின் சங்ரூர் நகரில் பகவான்புரா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பதேபிர் என்ற 2 வயது சிறுவன் அருகிலிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான்.
இதையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த மீட்புக் குழுவினர், சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அந்த சிறுவனுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவை அளிக்க முடியாத சூழலில் பிராணவாயு தொடர்ந்து அளிக்கப்பட்டது. இயந்திரங்களின் உதவியுடன் ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய அளவில் மற்றொரு குழி தோண்டப்பட்டு மீட்பு பணி தொடரப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை சிறுவன் குழியில் விழுந்த நிலையில் 109 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆழ்துளை கிணற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டான். இதையடுத்து சிகிச்சை அளிக்கும்பொருட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
109 மணிநேரங்கள் ஆழ்துளை கிணற்றின் இருளில் தன்னுடைய உயிரை தக்கவைத்த சிறுவன், மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.