வேறொரு சிறைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காரைக்கால் கிளைச்சிறையில் 15 சிறைக்கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கிளைச்சிறையில் இருக்கும் 38 கைதிகளில், 15 பேர் தண்டனைபெற்ற கைதிகளாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கைதிகளுக்கு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சிறையில் ஆய்வு மேற்கொண்டு,
அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் சட்டப்படி 3 மாதத்திற்கு மேல் தண்டனைப்பெற்ற கைதிகளை தொடர்ந்து, கிளைச் சிறைச்சாலையில் வைத்திருக்கக்கூடாதென்று கூறப்பட்டிருந்தது.
இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காரைக்கால் கிளைச்சிறையில் இருக்கும் 15 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிறையில் கட்டுமானப் பணிகளால் ஏற்படும் மேம்பாடு குறித்து, மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து சிறைக்கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.