தமிழகத்தில் போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்ற 13 பேரை, க்யூ பிராஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழகத்தின் சில நகரங்களில் போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்கப்படுவதாக க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், திருச்சியை சேர்ந்த கலைச்செல்வி இலங்கையை சேர்ந்த இடைத்தரகர்கள் விமலன், கிருபராஜா உள்ளிட்ட 13 பேர் இதில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவர்களை கைது செய்தனர். இவர்களில் ராதாகிருஷ்ணன் என்பவர் அமமுக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, திருச்சி, ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட இடங்களில் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு இந்த கும்பல் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
அவர்களிடமிருந்து 100 போலி பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து 13 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.