12 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பநிலை

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையில், இன்று காலை 8.30 மணிக்கே வேலூர் உள்ளிட்ட 12 பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே கோடை வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இந்த மாதம் 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் படிப்படியாக வெப்பம் உயர்ந்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின் 12 நகரங்களில் காலை 8.30 மணிக்கே வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. கத்திரி வெயிலின் போது வழக்கமாக முற்பகலுக்கு பிறகுதான் வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் ஆனால் இன்று காலை 8.30 மணிக்கே 100 டிகிரி வெப்பம் பதிவானது.

அதிகபட்சமாக வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், நாமக்கல்லில் குறைந்தபட்சமாக 100.4 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, திருத்தணி, தஞ்சாவூர், நெல்லை, மதுரை, சென்னை விமான நிலையம், பரங்கிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரிக்கு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.

Exit mobile version