சென்னை யானைக்கவுனி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.
குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களின்போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சி.சி.டி.வி. கேமராக்களை சென்னை பெருநகர் முழுவதும் பொருத்தி, குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல்துறை வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை பெருநகர் முழுவதும் பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என காவல் ஆணையாளர் விஸ்வநாதன் கேட்டுக் கொண்டார்.
இந்தநிலையில், சென்னை யானைக்கவுனி காவல்நிலைய வளாகத்தில் யானைக்கவுனி காவல்நிலைய எல்லைப் பகுதியில் பொருத்தியுள்ள 300 சி.சி.டி.வி. கேமராக்களின் இயக்கத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். இந்த சிசிடிவி கேமராக்கள், ஸ்பீக்கரை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறையை யானைக்கவுனி காவல்நிலையத்தில், காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் திறந்து வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், சென்னை முழுவதும் கண்காணிப்பு இல்லாத பகுதியே இல்லை என்ற நிலையை எட்டுவதற்காக செயல்பட்டு வருவதாக கூறினார்.
இதன் மூலம் யானைக்கவுனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட 100 சதவீதம் இடங்கள் சி.சி.டி.வி. கேமராக்களின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.