அரசு முத்திரையை பயன்படுத்தி 10 லட்சம் ரூபாய் மோசடி -ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் கைது

சிவகங்கையில் அரசு முத்திரையை பயன்படுத்தி 10 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மயிலாப்பூரில் துணை வட்டாட்சியராக இருந்து ஓய்வு பெற்றவர் அண்ணாதுரை. இவர் சிவகங்கை அகிலாண்டபுரத்தில் வசித்துவந்த நிலையில், அரசின் இலவச நிலம் மற்றும் வீட்டுமனை வாங்கித் தருவதாக பலரிடம் தலா 25 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.

மேலும் நிலத்தை பட்டா பதிவு செய்ததற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளார். அதில் தமிழக அரசின் முத்திரையும், நிலம் வழங்கும் அதிகாரி என்ற இடத்தில் தனது கையெழுத்தையும் இட்டு தந்துள்ளார். இதையடுத்து நிலத்தை வாங்கியவர்கள், அதை நேரில் சென்று பார்த்துள்ளனர்.

அது அரசின் புறம்போக்கு நிலம் என்பது தெரியவந்ததையடுத்து, சிவகங்கை, நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு அண்ணாதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Exit mobile version