இறக்குமதி வரியை உயர்த்துவது மட்டுமே நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு தீர்வாக அமையாது என்று முன்னாள் திட்டக் கமிஷன் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மத்திய அரசு 19 பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
வெண்மை பொருட்கள் பட்டியலில் வரும் ஏர் கண்டிஷனர்கள், ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் அத்தியாவசியமில்லா முக்கிய பொருட்களான விலையுயர்ந்த கற்கள், பயணப் பைகள் மற்றும் விமான எரிபொருள் போன்றவை அந்த பட்டியலில் அடக்கம்.
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பின் 108-வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் திட்டக் கமிஷன் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார்.
ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இறக்குமதி வரியை உயர்த்துவது தற்போது பழக்கமாகி விட்டதாக கூறியுள்ளார்.
நடப்புக் கணக்கு பற்றாக்குறை அச்சமூட்டும் அளவில் இல்லாவிட்டாலும் இதே நிலை நீடித்தால் அது கவலைக்குரியது என்றார் அலுவாலியா.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயில் ஏற்பட்டு வரும் தேய்மானம் இறக்குமதிக்கு சாதகமான சூழலை உருவாக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலையை பயன்படுத்துவதன் மூலமே நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அலுவாலியா அறிவுறுத்தினார்.