ரூபாய் மதிப்பு குறைந்து வருவதற்கு மக்களவை தேர்தல் தான் முக்கிய காரணம் என்று, ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் தாக்கத்தால், பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகின்றன.
ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதற்கு, பொருளாதார நிபுணர்கள் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு மக்களவை தேர்தல் தான் காரணம் என புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 1984-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பொதுத் தேர்தல் ஆண்டிலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதை புளூம்பெர்க் ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
இந்த வீழ்ச்சி குறைந்தபட்சம் 2.7சதவீதத்தில் இருந்து, அதிகபட்சமாக 19.2 சதவீதம் வரை இருந்துள்ளது.
2004 மக்களவைத் தேர்தலின் போது மட்டும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்திக்கவில்லை. அந்த ஆண்டு ரூபாயின் மதிப்பு 6.4 சதவீதம் ஏற்றத்தை சந்தித்துள்ளது.
2009 தேர்தல் ஆண்டில் அதிகபட்சமாக 19.2 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதே சமயம் 1999ம் ஆண்டு தேர்தலில் 2.7 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது. மற்ற ஆண்டுகளில் 5 லிருந்து 19 சதவீதம் வரை வீழ்ச்சி ஏற்பட்டதாக புளூம்பெர்க் நிறுவனத்தின் புள்ளி விவரம் அம்பலப்படுத்தி உள்ளது.