பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமாக செய்தியாளர் சந்திப்பு நேரத்தை மாற்றி அமைத்ததாக, தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிடுவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் டெல்லியில் நேற்று மதியம் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் இந்த சந்திப்பு பின்னர் திடீரென பிற்பகல் 3 மணிக்கு மாற்றப்பட்டது.
இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில், ‘‘மோடி பகல் 1 மணிக்கு ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு வசதியாக தேர்தல் ஆணையம், செய்தியாளர்கள் சந்திப்பை பிற்பகல் 3 மணிக்கு மாற்றிவிட்டது. இதுவா? தேர்தல் கமிஷன் சுதந்திரமாக செயல்படும் லட்சணம்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல் ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘‘கடைசி நிமிடத்தில் தேர்தல் ஆணையம் எதனால் செய்தியாளர் சந்திப்பு நேரத்தை மாற்றியது? என கேட்டுள்ளார். தேர்தல் நடைபெற இருக்கும் ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி சலுகைகளை அறிவிப்பதற்கு வசதியாகத்தானே இப்படி மாற்றினர்? என குற்றம் சாட்டியிள்ளார். தலைமை தேர்தல் ஆணையம், நரேந்திர மோடி, நாட்டு மக்கள் இந்த மூவரில் இதற்கு யார் வெட்கப்படவேண்டும்?’’ என்றும் சவுரவ் பரத்வாஜ் கேலி செய்துள்ளார்.