கட்டுமரம் கவிழ்ந்த பிறகு பாய்மரங்கள் கிழிந்த படகென அரசியல் கடலில் தடுமாறி சென்றுக் கொண்டிருக்கிறது திமுக. இருக்கின்ற பிரச்னைகள் போதாதென்று புதிதாக ஒரு சிக்கலுக்கு வித்திட்டுள்ளார் கலாநிதி மாறன். கிட்டத்தட்ட மூன்றாக உடைகிறதா திமுக என்று அடிமட்ட தொண்டன் கேள்வி எழுப்பும் அளவுக்கு இருக்கிறது அக்கட்சி. அப்படி என்ன பிரச்னை? என்ன நடக்கிறது திமுகவில்? அறிந்து கொள்வோம் இந்த செய்தி தொகுப்பின் வாயிலாக…
திமுக தலைவராக கருணாநிதி இருக்கும் போதே அக்கட்சியில் கோஷ்டி பூசல் என்பது சர்வசாதாரணம். மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தால் கொதித்து எழுந்த மூத்த மகன் மு.க.அழகிரியை அமைதிப்படுத்த தென்மண்டல அமைப்பு செயலாளர் என்ற புதிய பொறுப்பு திமுகவில் உருவாக்கப்பட்டது. மு.க.அழகிரியை கட்சியை விட்டு நீக்கிய பின்னும் மு.க.ஸ்டாலினுக்கும் அவருக்குமான யுத்தம் முடிந்தபாடில்லை. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு உண்மையான திமுக தொண்டர்கள் தன் பக்கம் தான் என்று கூறி சென்னையில் பேரணி ஒன்றை நடத்திக் காண்பித்தார் மு.க.அழகிரி. அதுதான் திமுகவில் இரண்டு அணிகள் செயல்படுவதை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்த சூழ்நிலையில் தமது சன் பிக்சர்ஸ் சார்பாக நடிகர் விஜய் – யை வைத்து சர்கார் என்ற படத்தை தயாரித்து வருகிறார் கலாநிதி மாறன். அதன் பாடல் வெளியீட்டு விழாவில் விஜயை தளபதி, தளபதி என்று மூச்சுக்கு முன்னூறு முறை அழைத்து மகிழ்ந்தார் கலாநிதி. அவரது இந்த செயலால் தூக்கம் இழந்து ஆத்திரத்தில் கொந்தளித்தாராம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். தளபதி என்பது திமுக தொண்டர்கள் தம்மை அழைக்கும் பட்டம் என்பது தெரியாதா கலாநிதி மாறனுக்கு? என்று கோப வார்த்தைகளை கொட்டித் தீர்த்தாராம். விஜயை தளபதி என்று மீண்டும் மீண்டும் அழைத்ததன் உள்நோக்கம் என்ன என்று தமது ஆதரவாளர்களிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளாராம் மு.க.ஸ்டாலின்.
திமுகவின் அரசியல் வாரிசு யார் என்று 2007-ம் ஆண்டு தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் தினகரனின் மூன்று ஊழியர்கள் தீக்கிரையானதும் உலகம் அறிந்தது. அப்போது முதற்கொண்டே திமுகவை மறைமுகமாக கொந்தளிக்க வைக்கவும், திமுகவில் தாங்கள் தனித்துவமானவர்கள் என்று சொல்லாமல் சொல்லும் செயலில் இறங்குபவர்கள் மாறன் சகோதரர்கள். கலாநிதி மாறன் தமது தொலைக்காட்சியில் அதற்கான செயல்களை முன்னெடுக்க, அரசியல் மட்டத்தில் தயாநிதி மாறன் அதற்கு ஒத்து ஊதுவது வாடிக்கையாக இருந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பார் என்று தெரிந்தும் நடிகர் விஜயை தளபதி என்று கலாநிதி மாறன் வெளிப்படையாக புகழ்ந்தது திமுகவில் மற்றுமொரு தனி அணி உருவெடுப்பதற்கான அச்சாரம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். கலாநிதி மாறன் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் தரப்பில் கோபக்கனல் வெடிக்க, இது தெரியாத அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், விஜய் தளபதி என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உதயநிதி அரசியல் அரிச்சுவடி படித்து வரவேண்டும் என்று திமுக தொண்டர்கள் நகைப்புடன் கூறுகின்றனர்.
மொத்தத்தில் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுக இரண்டாக காணப்பட்ட நிலையில், கலாநிதி மாறனின் செயல்பாடுகளால் மூன்றாக உடைகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமது கட்சி அரசியலையை கையாளத் தெரியாத மு.க.ஸ்டாலினா, தமிழக அரசியல் களத்தில் ஜொலிக்கப் போகிறார் என்று அங்கலாய்க்கின்றனர் அவரது கட்சித் தொண்டர்கள்.