பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரீப் ஆகியோர் கடந்த 14ஆம் தேதி லாகூர் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா (Adiala) சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தநிலையில் சிறையில் உள்ள நவாஸ் ஷெரீப் உயிருக்கு சக கைதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து சிறையில் இருக்கும் அவருக்கும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், தற்போது நவாஸ் ஷெரீப்புக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் உள்ள நைட்ரஜன் அபாய கட்டத்தை எட்டிவிட்டதாகவும் உடலில் நீரின் அளவு குறைந்து, சிறுநீரகம் செயலிழந்ததுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக அடியாலா சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.