ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்களுள் ஒருவர் ஜேக் மா. இவரின் அலிபாபா நிறுவனம், இ- காமர்ஸ் எனப்படும் வலைதளத்தில் பொருட்களை விற்பனை செய்வதில் முதலிடத்தில் உள்ளது. தனது தன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு தொழிலில் வெற்றி பெற்று சாதனை படைத்த ஜேக் மா, தற்போது விடாமுயற்சியால் நீண்டநாள் கனவான முனைவர் பட்டயத்தையும் பெற்றுள்ளார். ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்னர், மாணவர்களிடையே உரையாற்றிய அவர், 3 முறை தோல்வியை சந்தித்த காரணத்தால், முனைவர் பட்டம் பெறுவேன் என்று தான் நினைத்துப் பார்க்கவில்லை என்று ஜேக் மா தெரிவித்துள்ளார். தொடர் தோல்விகளை சந்தித்தாலும், கடின உழைப்பை கைவிடாமல் முயற்சி செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தோல்வியை மட்டுமே சந்திப்பவர்களுக்கு தனது வெற்றி ஒரு ஊக்கமாக இருக்கும் என்றும் ஜேக் மா தெரிவித்துள்ளார். பணத்தை எவ்வாறு சம்பாதிப்பது என்பதைவிட, அதனை எப்படி செலவு செய்ய வேண்டுமென்று தெரிந்தவரே சிறந்த தொழில்முனைவோர் என்று அவர் கூறினார். தொழிலில் பெரும் போராட்டத்திற்கு பிறகு பெற்ற வெற்றியை போன்று, தற்போது படிப்பிலும் சாதனை படைத்து இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் ஜேக் மா.